அதிமுக அரசு அதானி குழுமத்துடன் அமைத்துள்ள ஒப்பந்தம் குறித்து நடைபெற உள்ள விசாரணை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அரசுடன் அதானி குழுமம், சூரிய மின்சக்தி நிலையம் ஒன்று 1400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டிருக்கிறதாமே?” என்ற ஒரு கேள்விக்கு, 16-6-2015 அன்று நான் பதில் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்குச் சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது. இந்த 200 மெகாவாட்டையும் ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் தற்காலிக நிவாரணத்திற்கும், அதானியின் இந்தச் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!” என்று தெரிவித்திருந்தேன்.
அடானி குழுமத்தினர், தாங்கள் கமுதியில் நிறுவவிருக்கும் 648 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டத்திற்காக வாங்குவதாக உள்ள 1,800 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களைச் சரி பார்ப்பதற்காக வழக்கறிஞர் கபிலன் மனோகரனை நியமனம் செய்ததோடு, 70 இலட்சம் ரூபாயை வழக்கறிஞர் கட்டணமாகவும் தந்துள்ளது. வழக்கறிஞர் கபிலனிடம் அடானி குழுமம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஏக்கர் ஒன்றுக்கு 6000 ரூபாயை மூன்று கட்டமாகத் தர வேண்டும். வழக்கறிஞர் கட்டணத்தை கபிலன் தன்னிச்சையாக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்திக் கொண்டு, 4-1-2016 தேதிய கடிதத்தின்படி மேலும் 1 கோடியே 43 இலட்சம் ரூபாய் தர வேண்டுமென்று கேட்டுள்ளார். இ-மெயில் மூலமாக அவர் அனுப்பிய கடிதத்திலும் அதானி குழுமத்தின் அதிகாரிகள் அவரிடம் கூறிய தகவல்களை வெளிப்படுத்துவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
வழக்கறிஞர் கபிலன் மனோகரன் அனுப்பிய அந்த இ-மெயில் கடிதத்தில், அதானி குழுமத்துக்காக நிலம் வாங்கியதில், பல்வேறு முறைகேடுகள் செய்யப் பட்டிருப்பதாகவும், இப்போதுள்ள சட்ட விதிமுறைகள்படி முறையாக எதுவுமே நடைபெறவில்லை என்றும், மின்வாரியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே பல்வேறு மோசடி ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்றும், இவ்வாறு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு வங்கி களில் அடானி குழுமத்துக்காக சுமார் 4,300 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டிருப்பதாகவும், மேலும் பல முறைகேடுகளையும் தெரிவித்திருக்கிறார். மேலும், எவ்வளவு அரசியல் அழுத்தம் கொடுத்தாலும் அடானி குழுமம் செய்திருக்கக் கூடிய சட்ட விரோத நடவடிக்கைகளை மூடி மறைத்திட இயலாது என்றும், ஒரு விசாரணை என்று வரும்போது, சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் மோசடிச் செயல்கள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிய வரும் என்றும் மிகவும் ஆணித்தரமாக அவருடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
வழக்கறிஞர் கபிலன் மனோகரன் வெளியிட்டுள்ள இந்த விவரங்களையெல்லாம் பார்க்கும்போது, அடானி குழுமத்திற்கு இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு எப்படிக் கொடுத்தது என்பதற்கான பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்பதற்கொப்ப உண்மை வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவித்துத் தான், நீதியரசர் சசிதரன் அவர்கள் வழக்கினை விசாரித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அ.தி.மு.க. அரசு அதானி குழுமத்தோடு அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அந்தக் குழுமத்திற்கு சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக, மோசடியாக இந்த மின் திட்டத்தை எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளிகளும் கோராமல் அளித்திருக்கிறது என்பதை இந்த வழக்கிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
எனவே இந்தத் திட்டத்தை அடானி குழுமத்திற்கு அ.தி.மு.க. அரசு அளித்தது பற்றி சட்டப்படியான குற்ற விசாரணை நடைபெற்று, மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட வேண்டுமென்பது தான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமும் ஆக இருக்கிறது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.