தில்லி காவல் துறை சார்பில் வருடாந்திர ஊடகச் சந்திப்பு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பி.எஸ். பஸ்ஸி பேசியதாவது:
நவீனத் தொழில்நுட்பம்: குவாஹாட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற காவல் துறை மாநாட்டில், காவல் துறையில் நவீனத் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, தில்லி காவல் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்ப வசதிகள் காவல் துறையின் நேரத்தை சேமிக்க உதவியுள்ளதுடன், திறனையும் மேம்படுத்தியுள்ளது.
காணமல் போன பொருள்கள், வாகனங்கள், வங்கி ஆவணங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க நவீன செல்லிடப்பேசி அறிமுகப்படுத்தியுள்ளோம். மகளிருக்கு பிரத்யேக ஹிம்மத் செயலியும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மகளிர் பாதுகாப்பு: மகளிர் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 13,543 பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகளிர் பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறோம். சட்டம் அனுமதித்தால், மகளிருக்கு எதிராக குற்ற வன்செயல்களைப் புரிவோரை சுட்டுக் கொல்வதிலோ, தூக்கில் போடுவதிலோ எங்களுக்கு மகிழ்ச்சியே.
காவலர்கள் உண்மையை மறைத்ததால் 90 சதவீதமான புகார்களுக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே, மகளிர் பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு காவலரும் உண்மையை மறைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைத் தேடி அலைவதைவிட, குற்றம் நிகழாமல் தடுக்கும் வகையில், மகளிர் பாதுகாப்புக்காக மகளிர் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ரோந்து: தில்லியில் போக்குவரத்து நெரிசலை வான் வழியாகக் கண்காணிக்க, தில்லி போக்குவரத்துக் காவல் துறை ஹெலிகாப்டர் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
தில்லி காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதது அதிர்ஷ்டமேயாகும்..
பயங்கரவாதிகள் இலக்கில் தில்லி: தில்லி எப்போதுமே பயங்கரவாதிகளின் இலக்கில் உள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தில்லி காவல் துறை எப்போதும் தயார் நிலையில் விழிப்புடன் உள்ளது. பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் பி.எஸ். பஸ்ஸி.