மக்கள் நலக்கூட்டணி பற்றி கருத்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் அது அ.தி.மு.க.வின் பினாமி என்று கூறியிருந்தார்.இதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது நான் மேடைகளில் ஸ்டாலினைத் தான் அதிகம் விமர்சிக்கிறேன் என்றும் அ.தி.மு.க.வை விமர்சிக்கவில்லை என்றும் கூறுவது தவறு. எனது எல்லா பொதுக் கூட்டங்களிலும் அ.தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி 30 நிமிடம் பேசுகிறேன். ஆனால் ஸ்டாலினைப் பற்றி 3 நிமிடம் மட்டுமே பேசுகிறேன். எனது கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும். நாங்கள் அரசியலில் கொள்கை குறிக்கோள்களுடன் செயல்படுகிறோம். எனவே ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்.
இப்போது விஜயகாந்த் தி.மு.க.வுக்கு கதவை மூடிவிட்டார். அந்த எரிச்சலில் மற்றவர்கள் மீது பாய்கிறார். ஸ்டாலின்தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பினாமி போல் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் எங்களைப் பார்த்து அ.தி.மு.க.வின் பினாமி என்கிறார். அவருக்காக நான் பரிதாப்படுகிறேன்.நாங்கள் அ.தி.மு.க.வின் பினாமி என்றால் ஸ்டாலின் 2ஜி ஊழலில் பினாமி என்று நான் சொல்லலாமா? இப்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் மக்கள் வெறுக்கிறார்கள். 1967–ல் மக்கள் முதல் முறையாக மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அது போன்ற மாற்றத்தை இப்போது கொண்டு வருவோம்.என்று வைகோ கூறினார்.