திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆதரவாக, திண்டுக்கல் உழவர் சந்தை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆளும் கட்சியை மட்டும் மாற்றுவது ஆட்சி மாற்றமல்ல. அதனோடு கொள்கை ரீதியாக அரசியல் மாற்றமும் ஏற்பட வேண்டும். கடந்த 48 ஆண்டுகளில் 10 பொதுத் தேர்தல்களை தமிழக மக்கள் சந்தித்துள்ளனர். ஆளுகின்ற கட்சி மட்டுமே 5 ஆண்டுக்கு ஒருமுறை மாறியுள்ளது. கொள்கை அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை.
லோக் அயுக்தா சட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக மற்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதே போல், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. எனவே இந்த 2 கட்சியினரும் லோக் அயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும் என்று அளித்துள்ள வாக்குறுதியை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.