யாழ்.வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களான இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த அதிரடிச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்குக் கடலில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குறித்த மீனவர்கள் சட்ட விரோதமாக வாடி அமைத்துத் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை மீறி வெளிமாவட்ட மீனவர்கள் செயற்பட்டு வருவதால் , தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தும் அது பலனளிக்காத நிலையிலேயே நேற்று இரவு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களைக் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கடலில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன் போது வெளிமாவட்ட மீனவர்கள் ஒன்பது பேரும், அவர்கள் கடலட்டை பிடியில் ஈடுபட்டிருந்த மூன்று படகுகளும் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் நீரியல் வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.