அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களை கையப்படுத்தும் அரசாங்கம் … பங்குபோடும் வெளிநாடுகள்..

தமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு போட்டு கையகப்படுத்தும் வேலைகளையே முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அதோடு மக்களின் பிரதிநிதிகள் என சொல்லிக் கொள்கின்றவர்கள் மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமது நலன்ளைக் கருத்திற் கொண்டு இத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அனந்தி சசிதரன்
குற்றம் சுமத்தியுள்ளார்.

கேள்வி கேட்பவர்களாக மக்கள் மாறும் வரையில் தொடர்ந்தும் அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டக் கொண்டு தான் இருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவற்றினை கூறியுள்ளார்.

மேலும் , இலங்கை மீது அக்கறை அல்லது இலங்கையை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக் கொண்டே வெளிநாடுகள் இங்குள்ள வளங்களை அவர்கள் சுரண்டி வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் குறிப்பாக பலாலி விமான நிலைய அபிவிருத்தி செய்வதற்காக வளம் கொழிக்கும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் பெருமளவிலான மக்கள் நிலங்கள் அபகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்கள் இன்னமும் தமது காணிகளுக்குச் செல்ல முடியாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றதாகவும், ஆனால் அந்த மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்த மக்களின் காணிகளை விடுவித்து அவர்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்காமல் அக் காணிகளை சுவீகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாவை சேனாதிராச பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு காணிகளை வழங்குவதாக குறிப்பிட்டிருப்பதாகவும், மக்கள் அகதிகளாக இருக்கின்ற நிலையில் அவர்களது காணிகளை ஆக்கிரமித்த அபிவிருத்தி செய்வதென்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்றும் , அவ்வாறு மக்கள் அகதிகளாக இருக்கின்ற போது அதனை அபகரிக்க சம்மதம் தெரிவிப்பது வேடிக்கையானது எனவும் அனந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயத்தில் மாவட்ட அரச அதிபர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் , அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் விருப்பத்திற்கமையே இறுதி தீர்மானங்களை எடுப்பதே சிறந்ததாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் நாங்கள் மாகாண சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதாகவும்,

ஆனால் இப்பொது மாகாண சபை கலைக்கப்பட்டிருந்தாலும் அந்த தீர்மானங்களைக் கவனத்திற் கொண்டு செயற்படுவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் அனந்தி கூறியுள்ளார்.

போருக்கு பின்னரான நிலையில் பல சர்வதேச நாடுகள் இலங்கையின் வளங்களை தாம் கையாளும் அல்லது சூறையாடும் நிலை இருக்கிறதாகவும்,

அதனை அந்தந்த பிரதேச அரசியல்வாதிகளும் அரசும் தான் தீர்மானிக்கிறது என்றும், இதற்கு எங்கள் அரசியல்வாதிகளும் துணைபோகின்றதாகவும்,ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் ஏனெனில் அந்தந்த பிரதேசங்களில் உள்ள மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்,

சர்வதேச நாடுகள் தங்களுக்கு தேவையானவை எங்கு எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை சுரண்டுவார்கள். இதற்காக அரசியல் பிரமுகர்களையும் திருப்திப்திப்படுத்திக் கொண்டு அந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

எனவே இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு கேள்வி கேட்பவர்களாக மக்கள் மாற வேண்டும் எனவும், அவ்வாறு மாறாத வரையில் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் எனவும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்திஅரசாங்கம்தமிழர் பிரதேசம்வெளிநாடுகள்
Comments (0)
Add Comment