அம்மா குடிநீர் திட்டம்

சென்னையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் வசதி படைத்தோர், ‘மினரல் வாட்டர்’ என்று பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல், மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை  வாங்கி பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.   இந்த குடிநீரை ஏழை மக்களும் வாங்கிப் பருக வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின் விருப்பம் என்பதால், இதனை நிறைவேற்றும் வகையில், ‘அம்மா குடிநீர் திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த ஆணையிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு விலை ஏதுமின்றி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் ஏழை எளிய மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்திலிருந்து எளிதில் குடிநீர் பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

எளியஏழைசென்னைமக்கள்மினரல்வாட்டர்
Comments (0)
Add Comment