எதிர்வரும் ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும் அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு அரசு இரகசியமாக பேச்சுக்களை நடத்தி வருகிறது. இந்தத் தருணத்தை பயன்படுத்தி அரசை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சிகளும் பேதங்களை மறந்து ஓரணியில் இணைய வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக அமையப் போகின்றது. மேல் மாகாண சபை மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.
நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தலை ஜூன் மாதம் நடத்த அரசு திட்டமிடுகிறது. அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு இரகசியமாக திட்டங்கள் தயாரிக்கப்படுவதோடு இது தொடர்பில் அரசு இரகசியமாகப் பேச்சுக்களை நடத்தி வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஜே.வி.பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் அரசியல் பேதங்களை மறந்து ஓரணியில் இணைய வேண்டும். நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலில் இந்த அரசைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றார்.