சென்னையில் உள்ள 18 அரசு ஆஸ்பத்திரிகளை சேர்ந்த டாக்டர்கள் 2 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கே.எம்.சி., உள்ளிட்ட 18 அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இன்று தற்செயல் விடுப்பு போட்டு விட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
எம்.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள் காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன், பட்ட மேற்படிப்பு மாணவர் சங்க தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் அறப்போராட்டத்தால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வார்கள். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் இன்று செயல்படவில்லை.
ஒவ்வொரு சிறப்பு பிரிவுகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தனர். ஆனால் டாக்டர்கள் வராததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புறநோயாளிகள் பிரிவு தவிர உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் டாக்டர்கள் செய்தனர். தள்ளிப் போடக் கூடியவற்றை வேறு நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.
ராஜிவ் காந்தி மருத்துவமனை போல, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நோயாளிகள் மிகவும அவதிக்குள்ளானார்கள்.
போராட்டம் குறித்து அரசு டாக்டர் சங்க மாநில செயலாளர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் டாக்டர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இதுவரையில் இருந்தது. அவை தற்போது ரத்து செய்யப்பட்டதால் அரசு டாக்டர்கள் மேற்படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் உயர்படிப்பை படித்துவிட்டு அவர்கள் பிற மாநிலத்திற்கு சென்று விடுவார்கள். தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். 20 வருடமாக இருந்த சலுகையை ரத்து செய்யக்கூடாது. இதனால் இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதுடன் ஸ்பெஷலிஸ்ட் கிடைக்க மாட்டார்கள். எனவே இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து திங்கட் கிழமை தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.