தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கு ஏற்கனவே சட்டமன்றத்திற்காக தேர்தல் இம்மாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு மேலும் 3 வாரங்களுக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தமிழகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தி.மு.க. தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்பதோடு, மேற்காணும் இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களுக்கு இவ்வாறு தேதி ஒத்தி வைக்கப்படுவது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன் தி.மு.கழகத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கவில்லை. அங்கு தேர்தல் மேலும் 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவது எங்களிடமும் தெரிவிக்கப்படவில்லை. தேர்தலை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தி.மு.க. மீது குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.முக. மீது அபாண்டமாக பழி தெரிவித்து இவ்வாறு பொதுத் தேர்தலை இந்த இரு தொகுதிகளிலும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் முன்னர் எங்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்படவில்லை.
அரசியல் சந்தர்ப்ப வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்பட்டு தேர்தலை ஒத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பொதுத் தேர்தலை இடைத்தேர்தலாக மாற்றக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்தி வைக்க தி.மு.க.தான் காரணம் என்று வேண்டுமென்றே சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது குறித்து தி.மு.க.வுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் முறையான ஒன்று. ஜனநாயகத்தை நிலை நாட்ட, அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எனவே தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் ஏற்கனவே அறிவித்தபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், மேலும் 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்கிற முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.