அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்!

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வேண்டுகோளுக்கிணங்க, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பயன்தரும் அளவுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் அளித்து, விவசாய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

விவசாய மக்களுக்கு பயன் தரும் இந்த காப்பீட்டு திட்டம் மூலம் கடன் பெறலாம், விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தலாம். மேலும், குறைந்த வட்டி காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை தமிழக பா.ஜ.க. தலைவராகிய நான் சோகமுடன் சொல்கிறேன். ஏனென்றால், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து தமிழக மக்கள் மட்டுமல்லாது, தமிழக தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசால் அவசர சட்டம் இயற்ற முடியாது. ஆனால் அதே சமயத்தில், தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியும்.

மத்திய அரசு இதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு நல்க முடியும் என்ற செய்தியை மின்னஞ்சல் மூலம் மத்திய தலைமை எங்களுக்கு அனுப்பி இருக்கிறது. எனவே, அவசர சட்டம் இயற்றி தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒரு நாள் இருக்கும் போது எப்படி அவசர சட்டம் கொண்டு வர முடியும்? அதற்கு வழிமுறைகள் இருக்கிறதா?

பதில்:- மத்திய அரசு எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அதை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர் தான் தெரிவிக்கும். எனவே அதற்கான வழிமுறைகள் கண்டிப்பாக இருக்கிறது. மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டது.

கேள்வி:- அவசர சட்டம் இயற்ற மாநில அரசை கூறும் நீங்கள், ஏன் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கூடாது?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கும் போது, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்துவதற்கு சிக்கல் வந்துவிடும். மத்திய அரசு ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த அனுமதி வாங்கி தர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்படுகிறது. அனைத்து கதவுகளும் தற்போது மூடப்பட்டு விட்டன. தற்போது இருக்கும் ஒரே வழி மாநில அரசின் கையில் தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அவசரஇயற்றிசட்டம்ஜல்லிக்கட்டுநடத்தலாம்
Comments (0)
Add Comment