ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் – வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாகப் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளாகப  மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைத் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்றிட வேண்டும், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை முதன்மை பாடமாக வைக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்திட வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும் போன்ற 15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஏற்கனவே 4 கட்டமாக போராட்டங்கள் நடத்தியது.

ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பதால் அவர்கள் 5 ஆம் கட்டமாக தற்போது 3 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இப்போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு நாள் (01.02.2016) வகுப்பை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். ஏற்கனவே மழை, வெள்ளத்தின் போது நீண்ட நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் இறுதித் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு, போராடும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். எனவே ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து அதன்படி 6 வது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகளை கலைந்து, ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுஅறிக்கைஆசிரியர்கள்கோரிக்கைஜிகே வாசன்தமாகாதமிழகம்தலைவர்பள்ளிபோராட்டம்
Comments (0)
Add Comment