ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மேலும் 7 பேர் மனுதாக்கல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்பட 7 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர். வருகின்ற 27-ந்தேதிஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

இந்நிலையில் தமிழ் மாநில கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர்ஆர்.சி. பால் கனகராஜ் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார். அப்போது தமிழ் மாநில கட்சியின் பொதுச்செயலாளர் எல்.செங்குட்டுவன், பொருளாளர் எஸ்.காசி ராமலிங்கம், மாநில துணை பொதுச்செயலாளர் ஈ.நிக்சன், தேர்தல் பணிக்குழு தலைவர் தங்க சாந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த ஆர்.சி. பால் கனகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நான் போட்டியிடுகிறேன். இலவசங்களால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். தரமான கல்வி, மும்மொழி கல்வி திட்டம் இல்லாத காரணத்தால் மக்கள் வாழ்வு மேம்படாமல் அதே ஏழ்மை நிலையிலும், நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டி கல்வி கொள்கையில் மாற்றம் பெற தமிழ் மாநில கட்சி போராடும்” என்றார்.

இதேபோல் காந்தியவாதி எஸ்.கே.சசிபெருமாள், பி.இசக்கிமுத்து, டி.எஸ்.தனஞ்செயன், ஜே.ஜெயக்குமார், எம்.சுபாஷ் பாபு ஆகிய 5 பேர் சுயேச்சையாகவும், தமிழ் மாநில திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் யூ.கே.மணிமாறன் என மொத்தம் 6 பேர் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர்.

நேற்றைய தினம் மட்டும் 7 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதோடு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.மகேந்திரன் நாளை மறுதினம் வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். மனுதாக்கல் செய்வதற்கு முன்னதாகவே அவர் நேற்று ஆதரவாளர்களுடன் தண்டையார்பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

ஆர்.கே.நகர்இடைத்தேர்தல்தண்டையார்பேட்டைபிரச்சாரம்மனுதாக்கல்வழக்கறிஞர் பால் கனகராஜ்வேட்புமனு
Comments (0)
Add Comment