ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அர்னியா, ஆர்.எஸ். புரா மற்றும் அக்னூர் பகுதிகளில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையின் 25 நிலைகள் மற்றும் 19 கிராமங்கள் மீது நேற்றிரவு 10 மணி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
இதற்கு, இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் தாக்குதலில் 3 பசு மாடுகள் உயிரிழந்ததாகவும், எல்லைப்புற கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதே பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 18 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.