இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பெண்கள்: அமைச்சர் மனோகர் பரிக்கர் தகவல்

இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பெண்களை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறியுள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பரிக்கர், பெண்களை போரில் ஈடுபடுத்துவதே தனது விருப்பம் என்றும், இது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பெண் வீரர்களை எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் உள்நாட்டில், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாகவும் பரிக்கர் கூறினார்.

போர் விமானங்களில் பெண்களை ஈடுபடுத்துவது படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும், இது உடனே நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார். அரபு நாடுகளில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்பதையும் பரிக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ராணுவம்இறுதி முடிவுபயங்கரவாதத் தடுப்புப் பிரிவுபாதுகாப்புத்துறைபெண்கள்மனோகர் பரிக்கர்
Comments (0)
Add Comment