இந்துமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை அகற்றுமாறு சர்வமத தலைவர்கள் வலியுறுத்து

மட்டக்களப்பு,கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு மதத்தலைவர்கள்,பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மட்டக்களப்பில் இனங்களிடையே நல்லிணக்கத்தினையும், ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையிலும், இன முரண்பாடுகளை தீர்க்கும் வகையிலான நல்லிணக்க கூட்டம் நேற்றையதினம் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் தலைவருமான ஆயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத்தலைவர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி முகமட் அசாத்தின் உடற்பாகங்களை பொலிஸார் புதைத்த நிலையில், அதற்கு எதிராக 27ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீதிகள் மறிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில், இதன் காரணமாக இனங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலையினை உருவாக்கும் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தமையினால் இந்துக்களிடையே ஏற்பட்டுள்ள கவலையினை நீக்கும் வகையில், குறித்த உடற்பாகங்களை அகற்றுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது. இதன்போது குறித்த உடற்பகுதிகளை மீட்டு நீக்குவதற்கு அரசாங்க அதிபர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த உடற்பாகங்கள் அரசாங்க அதிபருக்கும், மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் தெரிவிக்கப்படாத நிலையிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வலியுறுத்து
Comments (0)
Add Comment