இனப்படுகொலை செய்த இராஜபக்சே அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை – தொல்.திருமாவளவன்

ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்த இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே மீதான விசாரணையில் அமெரிக்க அரசின் இரட்டை நிலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று (3-9-2015) அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, எழும்பூரிலுள்ள இராஜரத்தினம் திடல் அருகில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அங்கிருந்து பேரணியாக அமெரிக்கத் தூதரகம் நோக்கிச் செல்லத் திட்டப்பட்டது. ஆனால் பேரணியாகச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து, இராஜரத்தினம் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளித்தனர்.

இப்போராட்டத்தில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர். காலை 11 மணி முதல் 12.30 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்க அரசுக்கு எதிராக ஆங்கிலத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘அமெரிக்க அரசே சிங்களவனுக்குத் துணை போகாதே! தமிழனுக்குத் துரோகம் செய்யாதே! இராஜபக்சே கும்பலுக்கெதிரான சர்வதேச விசாரணையைக் கைவிடாதே’ என்றும் ‘ஈழத்தில் காணாமல் போன பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்து’ என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தலைவர் தொல்.திருமாவளவன் அமெரிக்க அரசின் போக்கைக் கண்டித்து உரையாற்றினார். “இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் அமெரிக்கா தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டது. சிங்கள இனவெறியர்களின் போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதுமென தற்போது அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இம்மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சர்வதேச விசாரணையே தொடருமென அமெரிக்கா அறிவிக்க வேண்டும். உலகத் தமிழர்கள் ஒற்றமையாக இருந்து இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஈழத்தில் காணாமல்போன சுமார் 30,000 தமிழர்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. பேரவை முன்வர வேண்டும் என திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் சுமார்  1 மணியளவில் அமெரிக்கத் தூதரகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தூதரக அதிகாரியைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவு அலுவலர் இம்மனுவைப் பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் வன்னிஅரசு, பாவரசு ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

இலங்கைகண்டன ஆர்ப்பாட்டம்போர்க்குற்றம்விசாரணைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Comments (0)
Add Comment