மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும், 6 லட்சம் வங்கி பணியாளர்களும் பங்கேற்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் ரெயில்வே, பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறை ஊழியர்களும், மாநில அரசு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.என்.டி.யூ.சி., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி.யூசி., விடுதலை சிறுத்தை, எம்.எல்.எப்., திராவிடர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் மன்றோ சிலை அருகில் தொ.மு.ச. தலைவர் சண்முகம் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பெருமளவு பங்கேற்றனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் 7 வங்கி தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஸ்டிரைக்கில் ஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 8500 வங்கி கிளைகளைச் சேர்ந்த 40 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில வங்கிகளில் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டன.
பணம் எடுத்தல், பணம் டெபாசிட் செய்தல் மற்றும் காசோலை பரிவர்த்தனை போன்றவை கடுமையாக பாதித்தன. கோடிக்கணக்கிலான மதிப்புள்ள காசோலைகள் தேக்கம் அடைந்தன. பொதுமக்கள் ஏ.டி.எம். மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். சேவை மையங்கள் முழுமையாக செயல்பட்டன. மேலும் தனியார் வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அவற்றின் எல்லா கிளைகளும் திறந்து இருந்தன. இதனால் தனியார் வங்கி சேவை பொதுமக்களுக்கு கை கொடுத்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரண்டனர். வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் சி.எச். வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் மக்கள் விரோத, பொதுத்துறை விரோத, தொழில் விரோத கொள்கையை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் கொடுத்த அறைகூவல் அடிப்படையில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர்கள் ஊதியம் போன்ற அடிப்படை பிரச்சினைகளில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதனால் சாதாரண மக்கள், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக, அன்னிய முதலீடு அனுமதிப்பது, முதலாளிகளுக்கு கூடுதல் சலுகை அளிப்பது மத்திய அரசின் கொள்கையில் பிரதான அம்சமாக உளளது. இக்கொள்கை தொடர்ந்தால் நாட்டின் இறையாண்மைக்கும் சுயசார்புக்கும் ஆபத்து நேரிடும். எனவே தொழிலாளர்கள் மேலும் ஒன்றுபட்டு இப்படிப்பட்ட மக்கள் விரோத கொள்கையை தொடர்ந்து எதிர்த்து போராடிய வேண்டியது காலத்தின் அவசியம். வங்கி துறையிலும் மத்திய அரசு தனியார் மயம், வங்கிகள் இணைப்பு, தனி முதலாளிகளுக்கு வங்கி தொடங்க அனுமதி போன்ற முடிவுகளை எடுத்து வருகிறது. ரூ.116 லட்சம் கோடி மொத்த சேமிப்பு புழங்கி வரும் வங்கிகள் பொதுத் துறையிலேயே தொடர வேண்டும்.
வங்கி தனியார் மயம் மக்களின் சேமிப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அந்த கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். அதே நேரத்தில் 13 லட்சம் கோடி அளவிற்கு வராக்கடன்கள் வங்கிகளில் பெருகி உள்ளது. இதில் பெரும்பான்மையான கடன்கள் முதலாளிகள் பெறப்பட்டு திருப்பி செலுத்தாமல் இருப்பதாகும். அவர்கள் மீது கடுமையான நட வடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசு அவர்களுக்கு மேலும் சலுகை காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. விவசாய கடன், கல்வி கடன்களை திருப்பி செலுத்தாத ஏழை மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு பெரும் முதலாளிகளுக்கு கடன் தொகை முழுவதும் ரத்து செய்து வருகிறது. இதன் காரணமாக பல வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
எனவே வங்கி வரா கடன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் தனியார் மயம், இணைப்பு போன்ற கொள்கைகளை கைவிடக் கோரியும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் காரணமாக வங்கி பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைக்கு மத்திய அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் முழுமையாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த அளவிலான தொழிலாளர்களே போராட்டத்தில் பங்கேற்றதால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை.