திருவள்ளூர் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்பதில், ஆந்திரா- தமிழகம் போலீசாரிடையே மோதல் உண்டானது.
இதனால் 9 மணி நேரம் பிரேதம் மீட்கப்படாமல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மாதர்ப்பாக்கம் அருகில் ஆந்திர எல்லையான பூண்டி குப்பத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குத்தூஸ் அன்சாரி, தனது மனைவி சேக் சர்மீளாவை, கடந்த 5-ஆம் தேதி முதல் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று பல்லவாடா காப்புக் காட்டில் சேக் சர்மீளா, சணல் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த தமிழக போலீசார், உடல் இருந்த இடம் ஆந்திரா எல்லை என விசாரணை நடத்த மறுத்து விட்டனர்.
அங்கு வந்த ஆந்திர போலீசாரும், எல்லையை காரணம் காட்டி விசாரிக்காமல் சென்று விட்டனர். இதனால் காலை பத்து மணி முதல் மாலை 7 மணி வரை சேக் சர்மீளாவின் உடல் மீட்கப்படாமல் அங்கேயே கிடந்தது. பின்னர் வனத்துறையினரின் வரைபடத்தை கொண்டு, தமிழக எல்லை என முடிவு செய்யப்பட்டதால், சர்மீளாவின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.