இலங்கை– இந்திய மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு செல்வதற்கு முன்னதாக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் சிலரை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாத இறுதிக்குள் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு மீனவப் பிரச்சினை தொடர்பாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் அமைச்சர் மஹிந்த அமரவீரரை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மீனவப் பிரதிநிதிகளைத் தவிர்ந்த வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், தெற்கை பிரதிநிதித்துவப்படுத்தி ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்திய மீன்பிடிப் படகுகளின் பிரவேசம், அந்நாட்டு மீனவர்களிடம் இருந்து ஏற்படுகின்ற சவால்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்ப ட்டிருப்ப தாக மீன்பிடித்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி தீர்ப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு செல்ல தீர்மானித்திருந்தார். இதற்கிடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மீன்பிடி அமைச்சர் இந்தியா செல்லும்முன் மீனவப் பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.