இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘எட்கா’ உடன்படிக்கை தொடர்பான பேச்சு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஓகஸ்ட் மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் எட்கா எனப்படும் ‘பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். இந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதமளவிலேயே இறுதிப்படுத்தப்படும். எட்கா ஒப்பந்தம் தொடர்பில் தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட வர்த்தக சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
எமது தொழில்நுட்ப ஏற்றுமதியானது ஒரு மில்லியன் டொலராகக் காணப்படுகிறது. 2020ஆம் ஆண்டாகும் போது இதனை 5 மில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். இந்த இலக்கை அடைவதற்கு இந்தியாவிலுள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனூடாக எமது நாட்டவர்களுக்கு மேலும் பல வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் இதனால்தான் நாம் இவ்வாறான ஒப்பந்தங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
ஒப்பந்தம் தொடர்பில் நாம் வர்த்தக சம்மேளனங்களுடனும், தொழிற்சங்கங்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ளோம். தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் நிலைமைகளைப் பகிரங்கப்படுத்த முடியும். இதில் ஒழிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.