இலங்கையில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று வெள்ளிக்கிழமை 19/09/2014 நடைபெற்ற இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு நிறைவு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இன அழிப்புக் கொள்கையை அங்குள்ள ஜனாதிபதி ராஜபக்சவும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு முழு அரசியல் உரிமை, விடுதலை கிடைக்க வேண்டும் என்பது தான் தாய் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்களின் எண்ணம். அதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், தமிழர்களின் உணர்வுகளை மத்தியில் ஏற்கனவே ஆண்ட காங்கிரஸ் அரசும், இப்போதுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசும் தொடர்ந்து அவமதித்து வருகின்றன.
இலங்கை நட்பு நாடு, அந்த நாட்டின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது என தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து வருகிறது. இலங்கைக்கு ஏற்கெனவே சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, இலங்கை அரசுக்கு பாராட்டுச் சான்றிதழ் அளித்து வந்தார். இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது ஐ.நா. மேற்பார்வையில் விசாரணை நடத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.
இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டை இலங்கை அரசு நடத்துகிறது. இதில், பங்கேற்க இந்தியாவில் இருந்து தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ் உட்பட 2 நிர்வாகிகள் கொழும்புக்கு சென்றிருப்பது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது.
இலங்கைக்கு அனுப்பிய தங்களது பிரதிநிதிகளை பாஜக திரும்பப்பெற வேண்டும். சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் இலங்கையின் ராஜதந்திர நடவடிக்கைக்கு, மத்திய அரசும், பாஜகவும் துணைபோகக் கூடாது என்றார்.