யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்குமிடையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும்,
இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விரிவுபடுத்துவதற்கு இந்தியா இணங்கியுள்ளதாகவும்,
அதற்கமைய, பலாலி விமான நிலையம் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய நிபுணர் குழுவொன்று, உடனடியாக அங்கு செல்லவுள்ளதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்,
இந்திய நிபுணர் குழுவுடன் இலங்கையின் சிவில் விமானசேவை தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரிவாக்கப் பணிகளுக்கு முன்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது அனைத்துலக விமானத்தைப் பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அனைத்துலக விமானங்களின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்பு சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணிகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படௌள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.