தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தேசிய பொதுச்செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் காதர்மொகிதீன் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் ஷாஜகான், முதன்மை துணை தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜீத், காயல் மகபூப், அப்துல் பாசித், ஜீவகிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் வரவேற்றார். மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தாய் சபையாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.கழகத்துக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், உங்களுக்கு எவ்வளவு வேதனை வந்தாலும், உங்களோடு ஒருங்கிணைந்து தான் இருப்போம். ஆளும் கட்சியாக இருந்தபோது, உங்கள் கோரிக்கை நிறைவேற்றியவர் கருணாநிதி. 2-வது முறையாக அவர் பொறுபேற்ற போது, தமிழ் பேசும், உருது பேசும், முஸ்லிம் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். 3-வது முறையாக முதல்-அமைச்சராக இருந்த போது, சிறுபான்மை நல வாரியம் அமைத்தது மட்டுமின்றி, அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்தார். நான்காவது முறையாக பொறுப்பேற்ற போது உருது அகாடமி அமைக்கப்பட்டது.
சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது. சிறுபான்மை மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் ரூ.331 கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டங்களை பட்டியலிட்டு, ஆதாரத்தோடு கூறமுடியும். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார். அவரை பொருத்தவரை சொன்னதை செய்வார். சொல்லாதையும் செய்வார். நீங்கள் நினைத்ததையும் நிறைவேற்றுவார். நினைக்காததையும் நிறைவேற்றுவார். யாரும் கவலைப்பட தேவையில்லை. மே மாதம் நடக்கும் தேர்தலுக்கு பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும், நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.