தமிழகத்துக்கு செப்.21 முதல் 27-ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்.20) உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான செளதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு குறித்து சட்டப்பேரவை மற்றும் மேலவையின் சிறப்புக் கூட்டம் நாளை செப்.23-ஆம் தேதி காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் விவாதித்து தீர்மானம் எடுக்கும் வரை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்திவைக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், தமிழகத்துக்கு நீரை பெற்று தர உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசின் செயல்களை பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும். அவர் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மதிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.