ஊட்டியில் கடும் உறை பனி! காவலாளி ஒருவர் கடும் குளிரால் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் முடிய பனிப்பொழிவு அதிகளவில் காணப்படும். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர்ப்பனி, உறைபனி அதிகளவில் நிலவும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது.

இன்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்தது. அப்பர்பவானி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெப்பநிலை 2 டிகிரியாக குறைந்தது.

வரும் நாட்களில் ஊட்டியின் வெப்பநிலை 0 டிகிரியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உறைபனியின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் புல்வெளிகள் வெண்பட்டு உடுத்தியது போல் காட்சியளிக்கிறது.

உறைபனியின் காரணமாக தேயிலை செடிகள், மலை காய்கறி செடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பிளாஸ்டிக் கவர்கள் போட்டும், செடி–கொடிகளை வெட்டிபோட்டும் பாதுகாத்து வருகிறார்கள்.

காலையில் நிலவி வரும் உறைபனி தாக்கத்தில் இருந்து மலர்செடிகளை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் உறைபனியால் லவ்டேல் பகுதியை சேர்ந்த கோவில் காவலாளி செல்வராஜ் (வயது 75) என்ற முதியவர் குளிர் தாங்கமுடியாமல் இறந்துவிட்டார்.

இதுகுறித்து தெரியவந்ததும் ஊட்டி நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடுங்குளிர் காரணமாக காலை நேரங்களில் டீக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தீமூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

உறைபனி காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து சென்று வருகிறார்கள். இதனால் நீலகிரி மாவட்டத்தில் தொப்பி, குல்லா, உல்லன் ஆடைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.

பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருவதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்

ஊட்டியில் கடும் குளிர்
Comments (0)
Add Comment