மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷ நோய்த்தொற்று தாக்குதலுக்கு இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இதற்கான மருத்துவ, நிதி உதவிகளை அந்நாடுகளுக்கு அளித்து இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இந்தியாவிலும் நேற்று முன்தினம் இந்த நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. ராணுவப் பிரிவு, தேசிய பேரிடர் நிர்வாகம், உலக சுகாதாரக் கழக அதிகாரிகள் உட்பட மத்திய அரசின் உள்துறை, வெளியுறவுத்துறை, மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தினைத் தொடர்ந்து நேற்று சில பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இது குறித்த அறிவிப்பும் தொடர்ந்து வெளியிடப்படும். அதுபோல் பயணிகளும் தாமாகவே முன்வந்து பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படியும் இந்திய மக்களை கேட்டுக்கொண்டார்.
கிட்டத்தட்ட 45,000 இந்திய மக்கள் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்து வருகின்றனர். அந்த நாடுகளில் நிலைமை விபரீதமாகும் என்றால் அவர்கள் இந்தியா திரும்பி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்று அமைச்சர் குறிப்பிட்டார். எபோலா வைரஸ் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் குறைவாக இருக்கும்போதும் இதனை சமாளிப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.