நாடு முழுவதும் நேரடி மானியத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், எரிவாயு இணைப்போடு வங்கிக் கணக்கை இணைக்க இனி ஒரு படிவம் மட்டுமே போதுமானது என சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தில் இணைவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர். ஒரே ஒரு படிவத்தை மட்டும் நிரப்பி, அத்துடன் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை, எல்பிஜி முகவர்களிடம் தந்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மார்ச் மாதத்திற்குள் பதிவு செய்தவர்களுக்கு, ஏப்ரல் மாதம் முதல், மானியம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தற்குள் பதிவு செய்யாதவர்களின் மானியம், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
அடுத்த 3 மாதத்திற்குள் பதிவு செய்தால், நிறுத்திவைக்கப்பட்ட மானியம் ஒட்டு மொத்தமாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் ஜூன் மாதம் வரை பதிவு செய்யாதவர்கள் எப்போது பதிவு செய்கிறார்களோ, அப்போதிருந்து மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். இது தொடர்பாக வரும் ஞாயிற்றுக் கிழமை கொளத்தூர், அண்ணாநகர், போரூர், பல்லாவரம், மீஞ்சூர் ஆகிய இடங்களில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.