தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி நெருங்கி வருகின்ற நிலையில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தனது பிரச்சாரத்தினை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க தனித்து போட்டி என அறிவித்ததும் அ.தி.மு.கவில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. நேற்று கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை துவக்கப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செயய்ய உள்ளார். அவருக்கான பயணத் திட்டம் வகுக்க முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்ததுபோல் இம்முறையும் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நாள் சென்னை, மீனம்பாக்கம் ஜெயின் கல்லுாரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாகவும், மொத்தம் 18 இடங்களில் பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.