உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து 358 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். சிறப்பு விமானங்கள் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு 168 பேரும், மும்பைக்கு 190 பேரும் வந்துள்ளனர். அவர்களை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
தாயகம் திரும்பியவர்கள், சொந்த நாட்டைக் கண்டதும் நிம்மதியடைந்தனர். ஏமனில் இருந்து திரும்பியவர்களை அவர்களது உறவினர்களும் ஆரத்தழுவி வரவேற்றனர். அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஏமனில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தடைந்த 16 தமிழர்களை அழைத்துவர தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்தையடுத்து அவர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் அங்கிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக ஏமனில் இருந்து 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கப்பல் மூலமாக ஜீபுவதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தற்போது விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.