ஏ.பி. பரதன் மறைவு: தில்லியில் இன்று இறுதிச் சடங்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் நேற்று முன்தினம் காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் தில்லியில் இன்று நடைபெற உள்ளது.

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், கட்சி தலைமையகத்திற்கு காலை 10 மணியளவில் கொண்டு வரப்பட உள்ளதாகவும், பகல் 1 மணியளவில் பரதனின் உடல் அடக்கம் நடைபெற உள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று  ஏ.பி. பரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூரில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இரா. திருஞானம் தலைமை வகித்தார்.

திமுக மாவட்டச் செயலர் துரை. சந்திரசேகரன், மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். மனோகரன், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலர் வீரன். வெற்றிவேந்தன், ஆம் ஆத்மி மாவட்ட அமைப்பாளர் எஸ். பழனிராஜன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் சதா. முத்துகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினர் இரா. அருணாசலம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் வெ. சேவையா, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்டச் செயலர் ம. விஜயலட்சுமி, பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கே. நடராஜன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே. அன்பழகன், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மண்டலத் தலைவர் ஆர். புண்ணியமூர்த்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ. ஜெய்சங்கர் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஇறுதிச்சடங்குகள்ஏ.பி.பரதன்மறைவு
Comments (0)
Add Comment