ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று அமெரிக்கா ஏற்கெனவே தெரிவித்திருக்கும் நிலையில்,இஸ்ரேலுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்தால் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இதற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் அரசு யூத குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றுமுன்தினம் விவாதிக்கப்பட்டது. அப்போது, பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் அமைக்கும் குடியிருப்புகள் சட்டவிரோதம் என்பது உட்பட அந்த நாட்டுக்கு எதிராக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியபோது, “ஐ.நா. சபையில் வடகொரியா, ஈரான், சிரியா நாடுகளைவிட இஸ்ரேல் மோசமாக நடத்தப்படுகிறது. கவுன்சிலின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக உள்ளன. எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. இஸ்ரேலுக்கு எதிரான போக்கு நீடித்தால் மனித உரிமை கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிடுவோம்” என்று தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹங்கேரி, டோகா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரிட்டன், குரேசியா, காங்கோ, ஜார்ஜியா, பனாமா, ருவாண்டா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஐ.நா. சபைக்கு அளிக்கும் நிதியுதவியையும் கணிசமாக குறைத்தது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தது.