மேலும் மகேந்திரசிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற ஐபிஎல் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். டாஸ்வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 43 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் கோலி 12 ரன்களில் வெளியேற அடுத்து ஆட வந்த வீரர்களும் குறைந்த ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர். 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த பெங்களூரு அணி 139 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் வேக பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களம்இங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான மைக் ஹஸ்ஸி 46 பந்துகளில் 56 ரன்களை குவித்து ரசிகர்களை உற்சாகத் தில் ஆழ்த்தினார். எனினும் சுரேஷ் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சிலரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இறுதியில் ஒரு பந்து மிச்சமிருந்த நிலையில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
கடந்த 8-ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் 6 முறை சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர் கொள்கிறது சென்னை அணி. இரு அணிகளுமே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் இறங்குவதால் இறுதி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.