சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரெயிலில் நாகர்கோவில் செல்ல திட்டமிட்டனர். இதே வேளையில் செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது.
நாகர்கோவில் செல்லும் ரெயில் என நினைத்து செங்கோட்டை பயணிகள் ரெயிலில் அரவிந்த் சுப்பிரமணியன் குடும்பத்தினர் ஏறினர். ரெயிலில் இருந்தவர்கள் இது செங்கோட்டை செல்லும் ரெயில் என கூறினார்கள். இதனால் அவர்கள் பதறிய படி ரெயிலில் இருந்து கீழே இறங்கினர்.
அப்போது ரெயில் புறப்பட்டு விட்டது. சீதாலட்சுமி ரெயிலில் இருந்து இறங்கியபோது கீழே விழுந்து ரெயிலுக்குள் சிக்கினார். இதில் அவர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனை பார்த்த சீதாலட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து பயணிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. சற்று நேரத்திற்கு முன் வரை தன்னுடன் இருந்த தனது மனைவி ரெயில் சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி இறந்ததை பார்த்த அரவிந்த் சுப்பிரமணியன் ரெயில் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீசார் விரைந்து வந்து சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லை ரெயில் நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.