கங்கை நதியை தூர்வார நிதியுதவி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் நிதீஷ்குமார் வலியுறுத்தல்

பிகார் மாநிலத்தில் பாயும் கங்கை நதியை தூர்வார மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில முதல்வர் நிதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பிகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

பிகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதி அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் இயல்பாக பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் தற்போது குறைந்த அளவே மழை பெய்துள்ளது. ஆயினும், கங்கை நதியில் மணல் படிவங்கள் உள்ளதால், மழை நீரை சேமிக்க முடியாமல் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துவதாக பிகார் அரசு கூறுகிறது.

எனவே, கங்கை நதியை தூர்வாரினால்தான் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்க முடியும் என்று கருதுவதால் மத்திய அரசின் நிதியுதவியை அம்மாநில அரசு நாடுகிறது.

அதற்காக பிரதமர் நரேந்திர மோடியை, பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது தேசிய தூர்வாரும் மேலாண்மைக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நிதீஷ் வலியுறுத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் நிதீஷ் கூறியதாவது:

என்னுடைய கோரிக்கைகளின் மீது உடனடியாகவும், அதற்கு சாதகமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேசிய தூர்வாரும் மேலாண்மைக் கொள்கையை வகுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் மோடி உறுதியளித்துள்ளார்.

மேற்கண்ட கொள்கையை ஏற்படுத்தாமல், கங்கையைப் புதுப்பித்து, நதி மாசடைவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட “நமாமி கங்கை’ (கங்கையை பாதுகாப்போம்) என்ற கனவுத் திட்டம் வெற்றியடையாது என்றார் நிதீஷ்.

கங்கை நதிநிதியுதவிநிதீஷ்குமார்பிரதமர் மோடிமத்திய அரசு
Comments (0)
Add Comment