கச்சதீவில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கில்லையா? அதிர்ச்சியில் ஜெ

கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும், கச்சத்தீவு தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்: “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.

‘கச்சத்தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வழக்கில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதுபோன்றே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பதில் மனு குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வராமல் இருந்திருக்கலாம் என கருதுகிறேன். தங்களை கடந்த மாதம் 3-ம் தேதி சந்தித்தபோது நான் அளித்த மனுவில் கச்சத்தீவில் இந்தியாவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்திருந்தது தங்களுக்கு நினைவு இருக்கும்.

‘ராமேசுவரம் அருகே 285 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் இருந்தது. கச்சத்தீவு முதலில் ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கான ஆவணங்களும் உள்ளன. கச்சத்தீவை சுற்றிலும் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இருந்தது. கடந்த 74, 76-ம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டு, தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனது.

கடந்த 91-ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளாமல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறிய செயல். இந்த ஒப்பந்தம் செல்லாது. இந்த ஒப்பந்தத்தைக் காட்டி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்’ என வலியுறுத்தினேன்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என எச்சரித்திருந்தார் என்பதை தற்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை ஆய்வு செய்து, திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சிஅரசுஇல்லைஉரிமைஎனகச்சத்தீவுகடிதம்கூறியுள்ளதுஜெயலலிதாதமிழகபகுதிபிடிக்கும்பிரதமருக்குமத்தியமீனவர்களுக்குமீன்முதல்வர்
Comments (0)
Add Comment