பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ரெயில்வே பட்ஜெட் வருங்காலத்திற்கு வழிகாட்டும் வகையில் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. ‘வைர நாற்கர’ அதிவேக ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் போக்குவரத்துக்கான கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிவேக ‘புல்லட்’ ரெயில்களை அறிமுகப்படுத்துவது விரும்பத்தக்க இலக்குதான். இதனால் நாட்டுக்கு பெரும் உத்வேகம் ஏற்படும்.
1850–ம் ஆண்டுகளில் மும்பைக்கு அடுத்தபடியாக சென்னையில் ரெயில் சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டது போல, இந்த புதிய தொழில்நுட்பமும், அடுத்து சென்னைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
நிலக்கரி போக்குவரத்து மேம்படுத்தப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கிடைப்பது சுலபமாகும். ரெயில்களின் தூய்மை, பாதுகாப்பு, உணவு வழங்கல், கழிப்பறை வசதிகள் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது சரியானதே.
இதேபோன்று ரெயில் சேவைகளில் பாதுகாப்பு அம்சத்திற்கும், உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை.
அதேசமயம், முந்தைய அரசு எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் கட்டணத்தை உயர்த்தியது போல் அல்லாமல், இனி வருங்காலத்தில் மேலும் கட்டண உயர்வுகள் இல்லாதபடி சாதாரண மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மற்றும் ரெயில்வே மந்திரியை கேட்டுக்கொள்கிறேன்.
ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளை விரைவாக மாற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்புள்ள பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றப்போவதாக ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ள யோசனையை வரவேற்கிறேன். ரெயில்வேயில் நடைபெற்று வரும் திட்டங்களை கண்காணிப்பதில் மாநில அரசுகளும் ஈடுபடுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.
நகர்ப்புற போக்குவரத்தை ரெயில்வேயுடன் இணைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ள அணுகுமுறை, தமது அரசு சென்னை நகர போக்குவரத்தை ஒருங்கிணைப்பது தொடர்பாக நீண்டகாலமாக தெரிவித்து வரும் கோரிக்கைக்கு இசைவாக உள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ். கட்டமைப்பை தாம் ஏற்கனவே கோரியபடி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதில் விரைவில் முடிவெடுக்க வசதி ஏற்படும்.
தமிழகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில ரெயில்வே திட்டங்கள் விரைவில் முடிவடைந்து, தமிழக மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறேன். சென்னையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புதிய ரெயில்களை இயக்குவதையும், மேல்மருவத்தூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவதையும் வரவேற்கிறேன்.
ரெயில்வே திட்டங்கள் மற்றும் செயல் பாட்டு நிர்வாகம் ஆகியவற்றில் செய்ய உத்தேசித்துள்ள மேம்பாடுகள் பயனளிக்கும். இதன்மூலம் மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்கள் நிறைவேறும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.