கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி-5

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி-5 ஏவுகணை சனிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஏற்கெனவே 2 முறை பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, முதல் முறையாக பாதுகாப்பு உருளைக் கலனுக்குள் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, ஒரு டன் எடையுள்ள அணுகுண்டைச் சுமந்து சென்று 5,000 கி.மீ. தூரம் வரை இலக்கைத் தாக்கும் திறன் வாய்ந்தது. ஒடிஸா மாநிலம், வீலர் தீவுப் பகுதியில் இருந்து இந்த ஏவுகணைச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம், ஒருங்கிணைந்த பரிசோதனை மைய (ஐ.டி.ஆர்.) இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறியதாவது: மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த ஏவுகணை அதன் கட்டுப்பாட்டு அறை மூலம் வாகனம் ஒன்றிலிருந்து காலை 8.30 மணிக்கு செலுத்தப்பட்டது. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கைத் தாக்கியதை அடுத்து சோதனை வெற்றிபெற்றது.

இந்த ஏவுகணையை நாம் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று இலக்கு நிர்ணயித்து செலுத்தலாம். இந்த ஏவுகணை சனிக்கிழமையுடன் (ஜன.31) மூன்றாவது முறையாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 19இல் முதல் முறையும், 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் இரண்டாவது முறையும் பரிசோதிக்கப்பட்டது.

மூன்றாம் முறையாக, உருளை பாதுகாப்புக் கலனுக்குள் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அந்த உருளை பாதுகாப்புக் கலன், அக்னி-5 ஏவுகணையை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு தக்கவைத்து கொள்ளும் திறன் வாய்ந்ததாகும். இந்த ஏவுகணை 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 50 டன் எடையும் கொண்டதாகும்.

அதிகமான புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை இதுவாகும் என்று பிரசாத் கூறினார்.

அக்னிஏவுகணைகள்:

இந்தியாவில் தற்போது அக்னி ஏவுகணை வரிசையில் 4 ரக ஏவுகணைகள் உள்ளன. அதில், அக்னி-1 ரக ஏவுகணையானது 700 கிமீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் வாய்ந்தது. அக்னி-2 ஏவுகணை, 2,000 கிமீ தூரமும், அக்னி-3, அக்னி-4 ஏவுகணைகள் 2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தூரமுள்ள இலக்கைத் தாக்கும் திறன் வாய்ந்தவையாகும்.

குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு: அக்னி-5 ஏவுகணைச் சோதனை வெற்றிபெற்றதை அடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அக்கினிஉள்நாடுஏவுகணைகண்டம்சனிக்கிழமைதயாரிப்புதாக்கும்பரிசோதனைபாய்தல்வெற்றி
Comments (0)
Add Comment