கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்!

தஞ்சை பர்மா காலனி காயிதே மில்லத் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார். இவரது மனைவி மீனா (34) இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

மீனா கடந்த வருடம் தனது கணவர் விபத்தில் சிக்கியதால் மருத்துவ செலவிற்காக அண்ணா நகரை சேர்ந்த அறிவழகன் என்பவரிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினார்.

தனது வீட்டை அடமானம் வைத்து 2 பைசா வட்டி வீதம் பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 11 மாதமாக மாதம் 15 ஆயிரம் வீதம் பணம் கட்டி உள்ளார்.

கடந்த 2 மாதமாக பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீனா தனது குடும்பத்துடன் திருச்சிக்கு சென்று விட்டார். அப்போது அங்கு வந்த அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீனா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசி விட்டு வீட்டை அவர்கள் கொண்டு வந்த பூட்டால் பூட்டி சென்று விட்டனர்.

திருச்சியில் இருந்து திரும்பிய மீனா தனது வீட்டின் பொருட்கள் வெளியே வீசப்பட்டு இருப்பதையும், வீடு பூட்டப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். ஆனால் தாமதம் ஆனதால் மீனா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மீனா வி‌ஷம் குடித்து விட்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மீனாவிடம் கேட்ட போது கூறியதாவது:-

நான் எனது கணவர் மருத்துவ செலவிற்காக வீட்டை அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் கடன் வாங்கினேன். 11 மாதம் பணத்தை முறையாக கட்டி வந்தேன். இதுவரை ரூ. 1 லட்சத்து 65 வரை கட்டி உள்ளேன்.

கடந்த 2 மாதமாக கட்ட முடியவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட அவர்கள் என்னிடம் கந்து வட்டி கேட்டனர். தினமும் ரூ. 3 ஆயிரம் கட்ட வேண்டும் என தொல்லை கொடுத்து வந்தனர்.

என்னால் அவ்வளவு பணத்தை கட்ட முடியவில்லை. மேலும் நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது வீட்டை பூட்டி பொருட்களை வெளியே வீசி சென்று விட்டனர்.

நாங்கள் இந்த வீட்டை ரூ. 16 லட்சத்திற்கு கட்டினோம். தற்போது அதன் மதிப்பு ரூ. 40 லட்சம் வரை இருக்கும். ரூ. 3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை அவர்கள் அபகரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ. 3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அபகரிப்புகணவர்கந்துவட்டிதமிழகம்தற்கொலைபெண்போலீஸ்வீடு
Comments (0)
Add Comment