பிரதமர் தசரா விழாவில் கலந்துகொண்டதை குறைகூறுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் வாழ்த்து சொல்லும் கருணாநிதி தீபாவளிக்கு ஏன் தெரிவிப்பதில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓட்டிற்“கஞ்சி”, சில மதத்தினற்“கஞ்சி”, “கஞ்சி” சாப்பிடுவது, அதுவும் முதல்-அமைச்சராக இருந்தபோது அஞ்சி, அஞ்சி, “கஞ்சி” சாப்பிடச் சென்றது மதச்சார்பின்மையா?. நான் அந்த நடைமுறையையோ மேற்கொள்ளும் மதத்தை விமர்சிக்கவில்லை.
ஆனால் அவர்களையே ஏமாற்ற அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தான் மதசார்பற்றவர் என்று காண்பிப்பதற்கு அவர்களின் நம்பிக்கையை இவர் பயன்படுத்துகிறார். ஆனால் தான் சார்ந்்திருக்கும் மதம் சார்ந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்வது எப்படி மத உணர்வை தூண்டுவதாக அமையும்?.
மன்மோகன்சிங், சோனியா போன்றவர்கள் இதே தசரா விழாக்களில் ஆளும் கட்சியாக இருக்கும்போது கலந்து கொண்டிருக்கிறார்களே?. ஏன் மன்மோகன்சிங் தான் பின்பற்றும் நம்பிக்கையின் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வழிபாடு நடத்தினாரே?. அப்படி என்றால் ஒரு மதசார்பற்ற நாட்டைச் சேர்ந்தவர் ஏன் அங்கே சென்றார் என்று கேள்வி எழுப்பினீர்களா?.
அதேபோல் தாங்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது, கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் வாழ்த்துகள் சொல்லும் நீங்கள் ஏன் தீபாவளி வாழ்த்துகள் சொல்லுவதில்லை. அப்படி என்றால், மதசார்பற்ற தலைவர் நீங்களா? அல்லது இந்து மதசார்பற்ற தலைவரா? என்பது எங்களின் கேள்வி மட்டுமல்ல மக்களின் கேள்வியாகவும் இருந்து கொண்டிருப்பதை தாங்கள் மறுக்க முடியுமா?.
ஆக, ஒன்று புரிகிறது. கர்நாடகாவில் தீர்த்து வைத்திருக்க வேண்டிய காவிரி பிரச்சினையை இன்றளவும் போராட வேண்டிய நிலைமைக்கு தொடர வைத்திருப்பவர் கருணாநிதி. அப்போதும் தாங்கள் அரசியல் கூட்டணிக்காக இதைச் செய்து கொண்டிருந்தீர்கள்.
ஆனால், இன்று உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரவாய்ப்பு இருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் உணர்த்திக்கொண்டிருக்கின்ற காலத்தில், அங்கு இத்தகைய அரசியலை செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு இல்லை என்பது மட்டுமல்ல, மதத்தை தூண்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டு மோடி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாத நிலையில், குற்றம் சாட்ட வேண்டுமே என்று சொல்லப்படும் இந்த குற்றச்சாட்டை மக்கள் புறந்தள்ளுவார்கள். ஏனென்றால் மக்கள் கருணாநிதியை புரிந்தே வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.