கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து செப்.16-இல் தேமுதிக உண்ணாவிரப் போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து தேமுதிக சார்பில் செப்டம்பர் 16-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்துக்குக் காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத சில கன்னட அமைப்பினர் 45 பேருந்துகள், 40 லாரிகள் உள்ளிட்ட தமிழகர்களின் சொத்துகளை எரித்து மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளனர். இந்த நிகழ்வுகளை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.

114 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நடக்கும் காவிரி நீர் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. தேசிய நதிகளை இணைப்பதன் மூலமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைதி காத்தது வேதனைக்குரியது.

கர்நாடக மக்களின் தொடர் வன்முறையைக் கண்டிக்கும் வகையில் தேமுதிக சார்பில் செப்டம்பர் 16-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.  12-ஆவது ஆண்டு விழா: செப்டம்பர் 14-ஆம் தேதி(புதன்கிழமை) தேமுதிக அதன் 12-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

தமிழகத்தில் நிலவும் நீண்ட காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், வறுமைக் கோட்டிக்குக் கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.

உண்ணாவிரப் போராட்டம்கர்நாடகம்தமிழர்கள்தாக்குதல்தேமுதிகவிஜயகாந்த்
Comments (0)
Add Comment