இது தொடர்பாக கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் சுவாகர்வர்மா, உதவியாளர் வெங்கடேசன், முதல்வர் கலாநிதி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கல்லூரி தாளாளர் வாசுகி உள்ளிட்ட 4 பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 8-ந் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சரோஜினிதேவி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிவா இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி சரோஜினிதேவி, மனுமீதான விசாரணையை 10-ந் தேதிக்கு(அதாவது நேற்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை 10.40 மணிக்கு நீதிபதி சரோஜினிதேவி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிவா, உயிரிழந்த மாணவிகள் மோனிஷா, பிரியங்கா ஆகியோரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. எனவே 4 பேரையும் ஜாமீனில் வெளியே விட்டால், சாட்சிகளை கலைக்கும் நிலை ஏற்படும் என்று வாதிட்டார்.
பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் தாளாளர் வாசுகி உள்பட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.