கவர்னர்-ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை, மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து, சட்டமன்ற குழுக்களை அமைக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற தலைவர் அபுபக்கர் ஆகியோர் நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தனர்.

அவர்களுடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. சட்டமன்ற கொறடா சக்கரபாணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன், பி.கே.சேகர்பாபு ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை அவர்கள் அனைவரும் சந்தித்து பேசினர். அப்போது சட்டமன்ற குழுக்களை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் கையெழுத்திட்டு 5 பக்க மனுவை வித்யாசாகர் ராவிடம் அளித்தனர்.

பின்னர் கவர்னர் மாளிகையில் இருந்து மாலை 5 மணியளவில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் வெளியே வந்தனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலினிடம் பேட்டி எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் குடை பிடித்தபடி கவர்னர் மாளிகை நுழைவுவாயில் அருகே நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் காரில் இருந்தபடியே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக சட்டமன்றம் தொடங்குகிறது என்றால் 15 நாட்களுக்குள் 12 குழுக்கள் அமைப்பது என்பது மரபு. ஆனால், 15-வது சட்டமன்றம் உருவாகி 6 மாதம் ஆகிறது. ஆனால், இதுவரை எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து, சட்டமன்றத்தில் கடந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது நானும், எங்களுடைய எதிர்க்கட்சி துணைத் தலைவர்(துரைமுருகன்), காங்கிரஸ் கட்சியின் தலைவர்(கே.ஆர்.ராமசாமி), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் (அபுபக்கர்) என அத்தனை பேரும் இந்த கேள்வியை எழுப்பினோம். அப்போது சபாநாயகர்(ப.தனபால்) இக்குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, அவை முன்னவரும்(ஓ.பன்னீர்செல்வம்) விரைவில் இக்குழுக்கள் அமைக்கப்படும் என விளக்கமளித்தார்.

அதைதொடர்ந்து, இக்குழுக்கள் பல நாட்கள் அமைக்கப்படாமல் இருந்த காரணத்தால் நானும், எங்களுடைய துணைத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நேரடியாக சென்று சபாநாயகர் மற்றும் அவை முன்னவரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.

அதேபோல, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களும் மனு அளித்துள்ளார்கள். இதுபற்றி, சபாநாயகர் வாய் திறக்கவில்லை. அவை முன்னவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குழுக்கள் என்பது அரசு நிர்வாகத்தை பொறுத்தவரையில் எப்படி செயல்படுகிறது என அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து அந்த ரிப்போர்ட் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சட்டமன்ற குழுக்களை தமிழக அரசு அமைக்காதது தமிழக வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்து தி.மு.க. காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து எங்களுடைய கோரிக்கை மனுவை அளித்திருக்கிறோம்.

சட்டப்பேரவை குழுக்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்தார். அப்படி கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நிச்சயமாக போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் தாண்டி நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அந்த நிலை வராமல் கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

கவர்னர்சட்டமன்றம்சென்னைசந்திப்புதமிழகம்ஸ்டாலின்
Comments (0)
Add Comment