இந்தியாவில், தொழில் திட்டங்களுக்காக காணிகளை சுவீகரிப்பதை இலகுவாக்குவதற்கான விதிகளை கொண்டுவரும் அரசாங்க திட்டத்தைக் கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான, காங்கிரஸ் கட்சியினால் தலைநகர் டில்லியில் நடத்தப்படும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நகர்வு விவசாயிகளுக்கும் வறிய மக்களுக்கும் எதிரானது என்று கட்சியின் தலைவி சோனியா காந்தி விபரித்துள்ளார்.
விவசாய காணிகளை தொழில் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு சுவீகரிப்பதை இலகுவாக்கும் ஜனாதிபதி ஆணை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் கடந்த டிசம்பரில் பிறப்பித்தது.
ஆனால், அது விவசாயிகளுக்கும், கிராமப்புற வறிய மக்களுக்கும் பெரும் பாதகமாக அமையும் என்று விமர்சகர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.