காவிரி பிரச்சனைக்கு வன்முறை தீர்வல்ல: அறிவுப்பூர்வமாக செயல்பட பிரதமர் மோடி வேண்டுகோள்

காவிரி பிரச்சனைக்கு வன்முறைச் செயல்கள் தீர்வாக அமையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கர்நாடக மக்களும், தமிழக மக்களும் உணர்ச்சி வேகத்தில் செயல்படாமல், அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் விரும்பத்தகாத பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கர்நாடகத்தின் பல பகுதிகளில் கட்டற்ற வன்முறை வெடித்து வருகிறது. அங்கு சென்ற தமிழக வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனிடையே, இந்தப் போராட்டத்தைக் கலைக்க போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிர்வினையாக தமிழகத்திலும் சில அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கர்நாடக அரசுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இரு மாநிலங்களிலும் நிலவி வரும் இந்த பதற்றமான சூழல், தற்போது நாடு முழுவதும் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
காவிரி பிரச்னையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கர்நாடகத்திலும், தமிழகத்திலும் அமைதி குலைந்து, அசாதாரண நிலை உருவாகியிருப்பது தனிப்பட்ட முறையில் தம்மை வேதனையடையச் செய்திருப்பதாக பிரதமர் மோடி அதில் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
காவிரி நீர் பிரச்னையை முன்னிறுத்தி இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது வருத்தத்துக்குரியது. இத்தகைய நிகழ்வுகள், என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளன.
ஜனநாயகத்தில் எந்த ஒரு பிரச்னைக்குமே வன்முறையோ, சட்டத்தை மீறிய நடவடிக்கைகளோ தீர்வாக அமையாது. நிதானமான செயல்பாடுகளின் வாயிலாகவும், பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் மூலலாகவும் மட்டுமே சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
வன்முறைகளாலும், தீ வைப்புச் சம்பவங்களாலும் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். இத்தகைய செயல்களால் அவர்களுக்கும், அரசாங்க சொத்துக்களுக்கும்தான் இழப்பு ஏற்படுகின்றன.
காவிரி விவகாரத்தை தமிழகம் மற்றும் கர்நாடக மக்கள் உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல், அறிவார்ந்து அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும், கடமைகளையும் கருத்தில் கொண்டு இரு மாநில மக்களும் செயல்பட வேண்டும்.
தேசத்தின் நலனும், ஒருமைப்பாடும்தான் மற்ற அனைத்தைக் காட்டிலும் பெரிது என்று அவர்கள் கருதுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அமைதி, நல்லிணக்கம், கட்டுப்பாடு, சுமுகமான தீர்வு ஆகியவற்றுக்கு இரு மாநில மக்களும் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றும் நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்கர்நாடகம்காவிரி பிரச்சனைபிரதமர் மோடிவன்முறை
Comments (0)
Add Comment