காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் : வேல்முருகன் வலியுறுத்தல்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை உறுதி செய்ய காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு; மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

இத்தகைய தமிழர்களுக்கு ஆறுதலைத் தரக் கூடிய ஒரு தீர்ப்பை பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கனவில் இருக்கிறது பாஜக.

இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு தாமதிக்க வாய்ப்பிருக்கிறது அல்லது கர்நாடகாவுக்கு சாதகமான ஒரு குழுவை அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகையால் உரிய வழிகாட்டுதல்களின்படியும் உச்சநீதிமன்ற உத்தரவின்படியும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திட உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் வஞ்சித்தே வரும் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் எந்த ஒரு இழுத்தடிப்பையும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை நிலைநாட்டுவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி மத்திய பாஜக அரசு அமைத்திட வேண்டும்.

இதற்காக அழுத்தங்களை மத்திய அரசுக்கு தமிழர்கள் நாம் ஒருங்கிணைத்து கொடுக்க வேண்டும். காவிரி ஆற்று நீர் விவகாரத்தில் நமக்கான உரிமையை வென்றெடுக்கும் இறுதித் தருணம் இது… அத்தனை மாச்சரியங்களை கடந்து தமிழராய் ஓரணியில் நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருமித்த குரல் கொடுப்போம் என்றும் அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்காவிரி மேலாண்மை வாரியம்தமிழக வாழ்வுரிமைக் கட்சிமத்திய அரசுவேல்முருகன்
Comments (0)
Add Comment