காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைச் செயலர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 1924-ஆம் ஆண்டு சென்னை அரசுக்கும், மைசூர் மன்னருக்கும் இடையே போடப்பட்ட காவிரி நீர் ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு முடிவுறும் நிலையில் அது புதுப்பிக்கப்படாமல் போகவே கடந்த 42 ஆண்டுகளாக காவிரி நீர் பங்கீட்டு பிரச்னை முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் காவிரி டெல்டாவில் முப்போக சாகுபடி இரு போகமாக மாறி, கடந்த சில ஆண்டுகளாக ஒருபோக சம்பாவும் முழு உற்பத்தித் திறனை இழந்து பெயரளவுக்கு சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழாண்டும் கர்நாடகம் காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை தரும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் கடந்த ஆண்டுகளைப் போன்று கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகமோ தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும் மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்றதுடன் அதற்கான உறுப்பினர்க
ளை கொடுக்க முடியாது என்று தனது சட்டப் பேரவையை கூட்டி, அதில் மத்திய அமைச்சர்களையும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதன் வாயிலாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் அவமதித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசோ கர்நாடக அரசின்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதற்கு பதிலாக கர்நாடகத்திற்கு துணைபோவதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து தமிழகத்துக்குரிய தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தமிழக விவசாயிகளின் எண்ணத்தை மத்திய அரசு தகர்த்துவிட்டது.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பை விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி, விவசாய சங்கங்கள் சார்பில் இதுகுறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.