காவிரி விவகாரம்: மத்திய அரசின் முயற்சி தோல்வி – உமா பாரதி

காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை மத்திய அமைச்சர் உமா பாரதி தலைமையில் நடைபெற்ற தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநில முதல்வர்கள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மாநில அரசு தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மாநில அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஆர்.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் மத்திய நீர் வளத் துறைச் செயலர் சசிசேகர் உள்ளிட்ட அத்துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கர்நாடகம் பிடிவாதம்: கூட்டம் தொடங்கியதும் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மாநிலத்தின் நான்கு நீர்த் தேக்கங்களிலும் செப்டம்பர் 28-ஆம் தேதி நிலவரப்படி 129.85 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. எனவே, தமிழகத்துக்கு மேற்கொண்டு நீரைத் திறந்துவிட முடியாது. கர்நாடகத்தின் நீர் நிலைமையை ஆராய நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
நீரைத் திறந்துவிட வேண்டும்: இதையடுத்து, தமிழக முதல்வரின் உரையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வாசித்தார். அதன் விவரம்: தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பரிசீலனை செய்யாமல், உடனடியாக அந்த அமைப்பை மத்திய அரசு அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்ட போது, “காவிரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் “கூட்டாட்சி’ தத்துவத்தை மதித்து தங்களுக்குள்ளாக முதலில் பேசி சுமுகத் தீர்வுக்கு முயற்சித்து ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றம் கடந்த 5, 6, 12, 20, 27 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். செப்டம்பர் 26-ஆம் தேதி நிலவரப்படி காவிரியில் இருந்து திறந்து விட வேண்டிய 76.042 டிஎம்சி நிலுவை நீரை கர்நாடகம் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதன் மூலம்தான் தமிழக காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி பயிர்களைப் பாதுகாக்க முடியும். டெல்டா பகுதி கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார் ராம மோகன ராவ்.
இதைத்தொடர்ந்து, தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கருத்தொற்றுமை இல்லை: இதற்கிடையே, கர்நாடக அரசின் யோசனைப்படி அம்மாநில நீர் இருப்பு நிலைமையை ஆராய நிபுணர் குழுவை அனுப்புவது குறித்து தமிழகத்தின் கருத்தை மத்திய அமைச்சர் உமா பாரதி கேட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அமைச்சர் பழனிசாமி, “முதலில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகம் நீரைத் திறந்து விடட்டும். அதன் பிறகு எதிர்காலத்தில் கர்நாடகத்தின் யோசனை குறித்து மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கலாம்’ என்றார். இதனால், ஒருமித்த கருத்தொற்றுமை எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் உமா பாரதி கூறியது: கர்நாடகத்துக்கு நிபுணர் குழு அனுப்பி வைக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா முன்வைத்த யோசனையை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் இக்கூட்டத்தை கூட்டி மத்திய அரசு சுமுகத் தீர்வுக்கு முயற்சித்தது. ஆனால், நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே, கூட்டத்தில் விவாதித்தவை பற்றிய அறிக்கையை அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) தாக்கல் செய்வோம் என்றார் உமா பாரதி.

உண்ணாவிரதம்: உமா பாரதி எச்சரிக்கை
“”காவிரி அல்லது வேறு எந்தவொரு நீர்ப் பங்கீடு விவகாரத்தால் வன்முறையோ பிற பிரச்னைகளோ ஏற்படக் கூடாது. அப்படி ஏதாவது நிகழ்ந்தால் அமைதி ஏற்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்.நீர்ப் பங்கீடு உள்ளிட்ட இரு மாநில நலன்கள் தொடர்புடைய விவகாரங்களில் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். நீரைப் பயன்படுத்தி யாரும் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என்பதுதான் பிரதமரின் விருப்பம். அதை மதித்து நாம் செயல்பட வேண்டும்” என்றார் உமா பாரதி.

உமா பாரதிகர்நாடகம்காவிரி விவகாரம்தமிழகம்மத்திய அரசுமுத்தரப்புக் கூட்டம்
Comments (0)
Add Comment