தீக்குளித்தவர் பலி
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ‘காவிரி உரிமை மீட்பு பேரணி’ சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் உடலை பார்த்து அவருடைய தந்தை பாண்டியன், தாய் கண்ணகி மற்றும் அக்கா ஜனனி உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வீரவணக்கம்
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், இயக்குனர் கவுதம், அகில இந்திய இந்து சத்திய சேனா தலைவர் வசந்தகுமார், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் விக்னேஷ் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இதையடுத்து உடலை மன்னார்குடி கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது திடீரென ஆம்புலன்ஸ் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியினர், விக்னேஷ் உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கு முன்பு சென்னையில் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் வைத்து வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம்
இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கி விக்னேஷ் உடலை கைப்பற்ற முயன்றனர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்ல போலீசார் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலத்திற்கு விக்னேஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு விக்னேஷ் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, களஞ்சியம், விக்ரமன், கவுதமன், வெற்றிமாறன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று இறுதிச்சடங்கு
மாலை 6 மணி வரை மட்டுமே விக்னேஷ் உடலை வைக்க போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். நேரம் ஆனதால் உடலை எடுத்துச் செல்லும்படி போலீசார் கூறினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட சிலர் வர இருப்பதால் மேலும் சிறிது நேரம் அனுமதிக்கும்படி கூறினர். இதில் போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு விக்னேஷ் உடல் வேன் மூலம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. விக்னேஷ் உடலுக்கு இன்று (சனிக்கிழமை) மன்னார்குடியில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. இதில் சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இதைத்தொடர்ந்து விக்னேஷ் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
அமைதியான வழியில்…
முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்னேஷ் மரணம் மன வலியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தொண்டர்கள் அமைதியான வழியில் போராடவேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு இந்த பிரச்சினையில் தீர்வுகாண வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக முத்துக்குமார், செங்கொடி ஆகியோர் உயிர் தியாகம் செய்தனர். அப்போதே உணர்ச்சி வசப்பட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறினேன். தொடர்ந்து அறிவுறுத்தியும் வந்துள்ளேன். இப்போது காவிரி பிரச்சினை கர்நாடகாவில் கொழுந்துவிட்டு எரிந்ததாலேயே இங்குள்ள இளைஞர்கள் உணர்ச்சிமயமாக இருந்தனர். அதுபோன்ற மனநிலையில் இருந்ததாலேயே விக்னேஷ் தன்னை வருத்திக்கொண்டு உடலில் தீ வைத்து உயிரிழந்துள்ளார்.
வலுவான போராட்டங்கள்
இந்த சம்பவத்துக்கு பிறகாவது மத்திய-மாநில அரசுகள் காவிரி பிரச்சினையில் செவி சாய்க்குமா? என்பதும் சந்தேகமே. காவிரி தண்ணீரும் இல்லை. அதற்காக களப்பணியாற்றிய தம்பியும் எங்களோடு இல்லை. அதை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது. தங்களது எண்ணங்களையும், கோரிக்கைகளையும் வலுவான போராட்டங்கள் மூலமாகவே இனி வரும் காலங்களில் முன் எடுத்து செல்லவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.