கிரானைட் முறைகேடு அறிக்கையை சமர்ப்பிக்க சகாயத்திற்கு 5வார காலம் அவகாசம்

கடந்தாண்டு நவம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, சகாயத்தை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதனையடுத்து, சட்ட ஆணையர் சகாயம், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணை அண்மையில் முடிவுற்றது. இதைத்தொடர்ந்து, தனது விசாரணை அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் சார்பாக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அப்போது டிராஃபிக் ராமசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் நாளை இறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

 இதனையடுத்து நீதிபதிகள், சகாயத்திற்கு வரும் நவம்பர் 23ம் தேதி வரை (5 வாரம்) அவகாசம் வழங்கியதுடன், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை முன்னதாக தயாரானால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்ததுடன் வழக்கை நவ.23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றம்கிரானைட் முறைகேடுசகாயம்சென்னைடிராஃபிக் ராமசாமிவிசாரணை அறிக்கை
Comments (0)
Add Comment